தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், விற்பனைக்கு முன் அந்த சொத்து தொடர்பான வரி நிலுவை எதுவும் உள்ளதா என்பதை தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் வீடு, மனைக்கான வரி மிக குறைவாக இருக்கும் என்பதால் மக்கள் இது விஷயத்தில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை.
ஆனால், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் வீடுகளுக்கு சொத்து வரி, நிலத்துக்கு காலி மனை வரி விதிக்கப்படுகிறது. நீங்கள் வீடு, மனை வாங்கும் போது அதற்கான சொத்து வரி நிலுவை இன்றி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை உரிய முறையில் சரிபார்க்க வேண்டும்.
இன்றைய சூழலில் வீட்டுக்கடன் கொடுக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியுள்ளன. இதனால், ஒருவர் வீட்டுக்கடனுக்காக விண்ணப்பித்தால், அதற்காக அவர் தேர்வு செய்த சொத்து பத்திரங்களை வங்கி ஆய்வு செய்யும் போது கடைசி மாதம் வரை சொத்து வரி, மின்சார கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.
பத்திரங்களின் பிரதிகளுடன் சொத்துவரி, மின்சார கட்டணம் நிலுவை இன்றி செலுத்தியதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்வது கட்டாயம். இந்நிலையில், சில இடங்களில்மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகள் சொத்து வரி செலுத்தாமல் இருப்பதை பார்க்க முடிகிறது.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து நோட்டீஸ் கொடுத்தும், சொத்து வரி செலுத்தாமல் இருக்கும் நபர்கள் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகின்றனர். இது போன்ற நபர்கள் திடீரென ஏற்படும் அவசர நிதி தேவைக்காக, வடு, மனையை விற்பனை செய்கின்றனர்.
இந்த சொத்துக்களை வாங்குவோர், வீட்டுக்கடனுக்காக விண்ணப்பித்தால், சொத்து வரி நிலுவை முட்டுக் கட்டையாக வரும். அப்போது, வீட்டுக்கடன் பெறும் வாய்ப்பை நழுவவிட கூடாது என்பதற்காக நிலுவை தொகையை செலுத்த உரிமையாளரிடம் செல்ல வேண்டியிருக்கும்.
உரிமையாளருக்கும் அவசர நிதி தேவை கழுத்தை பிடிக்கும் நிலையில் இருந்தால், அவர், சொத்து வரி நிலுவையை செலுத்த முன்வருவார். ஆனால், தொடர்நாது பல ஆண்டுகள் சொத்து வரி செலுத்தாமல், குறிப்பாக மதிப்பீடு கூட செய்யாமல் இருக்கும் நபர்களின் சொத்துக்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
இது போன்ற சொத்துக்களை அவசரம் கருதி வாங்கினால், பல ஆண்டுகள் நிலுவை வரி என்ற அடிப்படையில் சில லட்ச ரூபாய் வரை நீங்கள் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். நிலுவையை செலுத்தும் பொறுப்பை உரிமையாளர் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தலாம்.
ஆனால், பெரும்பாலான இடங்களில் சொத்து வரி நிலுவை வைத்தவர்கள், இது போன்ற இக்கட்டான சூழலில் தவிப்பது வழக்கம். அதற்காக, வீடு வாங்கும் ஆசையில் வரும் மற்றவர்கள் இந்த சுமையை ஏற்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவது நல்லதல்ல.
எனவே, சொத்து வரி தொடர்பான முறையான மதிப்பீடுகள் கூட இல்லாத வீட்டை வாங்க வேண்டும் என்றால் அது குறித்து ஒன்றுக்கு பல முறை யோசித்து இறங்குவது நல்லது. யாரோ ஒருவரின் அலட்சியத்துக்காக புதிதாக வீடு வாங்கும் நபர்கள் அலைகழிக்கப்படுவது நல்லதல்ல என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்.