ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், வீடு வாங்க திட்டமிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் விதமாக வங்கிகளுக்கான வீட்டுக்கடன் கொடுக்கும் விதிமுறைகளை தளர்த்த முடிவு செய்துள்ளதால், வீட்டுக்கடனுக்கான தவணைத் தொகை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வீடு வாங்குவதற்கு கடன் வழங்கி வரும் வங்கிகள், தங்களது கடன் வழங்குதலுக்காக ரிசர்வ் வங்கியில் குறிப்பிட்ட சதவீத தொகையை தனியாக இருப்பில் வைக்க வேண்டியது கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, மேற்கூறிய இருப்பு தொகை வைக்க வேண்டும் என்ற விதிமுறையை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. இதனால் இனி மேற்கூறிய கடன்களை வழங்கி வரும் வங்கிகள் இனிமேல் அந்த இருப்பு தொகையை கட்டாயம் வைக்க வேண்டியதில்லை.
இதன்மூலம் வங்கிகளின் கடன் வழங்குவதற்கான நிதிச் செலவு குறைவதால், கடன்களுக்கான வட்டியும் குறையும். இது தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கியின் முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் 40 முதல் 50 புள்ளிகள், அதாவது 0..5 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த அரை சதவீத வட்டி குறைப்பு என்பது, ஒருவர் 50 லட்சம் ரூபாயை , 20 ஆண்டுகள் தவணையில் வீட்டுக் கடனாக வாங்கினால் அவர் திருப்பிச் செலுத்தும் கடன் தவணையில் ( EMI ) 1,700 ரூபாய்க்கும் அதிகமாக குறையும்.
அதே சமயம் இந்த வட்டி குறைப்பு புதிதாக வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்குத்தானே தவிர, ஏற்கனவே வாங்கியவர்களுக்கு இல்லை. ஏற்கனவே வீட்டுக் கடன் வாங்கியவர்கள் அதே தவணைத் தொகையைத்தான் செலுத்த வேண்டும்” என்றார்.
இதனிடையே வரும் அதிகரிக்கும் வீட்டு விலை மற்றும் பணவீக்கத்தை கருத்தில்கொண்டு வீட்டுக்கடன் பெறுவதற்கான அதிகபட்ச வரம்பை அதிகரிக்கும் வகையில், மலிவு விலை வீட்டின் வரம்புத் தொகையை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.
இதன்படி டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் 6 பெருநகரங்களில் அதிகபட்ச வீட்டுக்கடன் தொகை ரூ. 50 லட்சமாகவும் ( சொத்து மதிப்பு ரூ 65 லட்சம் வரை) , இதர நகரங்களில் அதிகபட்ச வீட்டுக்கடன் தொகை ரூ. 40 லட்சமாகவும் ( சொத்து மதிப்பு ரூ. 50 லட்சம்) இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலை, அதிக வட்டி போன்ற காரணங்களால் தள்ளாடிக்கொண்டிருந்த ரியல் எஸ்டேட் துறை ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய அறிவிப்பின் மூலம் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான கடன் வட்டி விகிதம் 13 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் மேற்கூறிய நடவடிக்கையின் மூலம் வட்டி விகிதம் 150 புள்ளிகள் வரை குறையலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Source: Ananda Vikatan